Protest | UK | கண்டன ஆர்ப்பாட்டம் | பிரித்தானியா | 20.09.2023
தியாக தீபம் லெப் கேணல் திலீபன் அவர்களின் திருவுருவம் தாங்கி வந்த ஊர்தி தாயகத்தில் சிங்கள காடையர்களால் தாக்கப்பட்டத்தை கண்டித்து பிரித்தானியாவில் 20.09.2023 இல் நடாத்தப்பட்ட கண்டன ஆர்ப்பாட்டம்.
சிறீலங்காவில் தியாகி திலீபனின் நினைவூர்தி தாக்கப்பட்டமை, தமிழர்களின் மனித உரிமை மீறல்களின் வெளிப்பாடு!
தியாகி திலீபனின் நினைவூர்தியானது சிறீலங்கா பொலிஸின் முன்னிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சிங்களக் காடையர் குழுவொன்றால் மோசமாகத் தாக்கப்பட்டது, சிங்கள நாடானது ஈழத் தமிழர்களின் அடிப்படை மனித உரிமைகளை வரலாற்று ரீதியாக மறுப்பது ஈழத் தமிழர்களுக்கான தனித் தேசமொன்றுக்கான தேவையை மேலும் வலியுறுத்துகிறது.
இத்தாக்குதலின்போது குறிப்பிடத்தக்கதாக மதிப்புக்குரிய பாராளுமன்ற உறுப்பினரான செல்வராசா கஜேந்திரன், பிரபலமான சட்டத்தரணியான காண்டீபனும் திட்டமிட்ட குடியேற்றவாதிகளால் தாக்கப்பட்டனர். நினைவுகூரல் நிகழ்வொன்றின் அமைதியாக பங்கேற்பாளர்களுக்கெதிரான இக்கண்டிக்கத்தக்க வன்முறையானது தமதுரிமைகளுக்காகப் போராடுகின்ற தமிழ்த் தேசம் எதிர்கொள்கின்ற சவால்களைக் கோடிட்டுக் காட்டுகிறது.
இந்தியாவுக்கு தமிழீழ விடுதலைப் புலிகளால் முன்வெய்க்கப்பட்ட ஐந்து முக்கிய கோரிக்கைகள் தொடர்பாக கடந்த 1987ஆம் ஆண்டு உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டு உயிர்த் தியாகத்தைப் புரிந்த லெப்டினன்ட் கேணல் திலீபனை இந்த நினைவுகூரல் நடைபெற்று வருகின்றது. பயங்கரவாதச் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழர்களை விடுதலை செய்தல், மீள்குடியேற்றம் என்ற போர்வையில் தமிழ்ப் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் சிங்களக் குடியேற்றங்களை நிறுத்துதல், தமிழ்க் கிராமங்களிலுள்ள பாடசாலைகளிலிருந்து பாதுகாப்புப் படைகளை வெளியேற்றுதல் ஆகியவை முன்வெய்க்கப்பட்ட கோரிக்கைகளாக அமைந்தன.
இந்த கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு சிறீலங்கா மீது இந்தியாவினால் தாக்கம் செலுத்தக்கூடியதாக இருக்கும் என்ற தமிழீழ விடுதலைப் புலிகளின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் 1987ஆம் ஆண்டு செப்டெம்பர் 15ஆம் திகதி வரை இந்தியாவிடமிருந்து எந்தவொரு பதிலேதும் கிடைக்கப் பெறாத நிலையில், லெப்டினன்ட் கேணல் திலீபன், தனது சாகும் வரையான உண்ணாவிரத்தை ஆரம்பித்திருந்தார். துரதிர்ஷ்டவசமாக 12 நாள்களாக தண்ணீரை அருந்த மறுத்தமையையடுத்து 1987ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 26 ஆம் திகதி தனதுயிரை அவர் இழந்திருந்தார். அன்றிலிருந்து ஆண்டுதோறும் அவரது நினைவாக தமிழர்களால் உலகளாவிய ரீதியில் நினைவுகூரல்கள் நடத்தப்படுகின்றன.
இச்சம்பவமானது நினைவுகூரலை அடிப்படை உரிமையென்று அங்கிகரிப்பது முக்கியமானதொன்றாகும், நினைவு கூரல், சமூகங்கள் தமது வரலாற்றையும் மற்றும் தங்களது நோக்கத்துக்காக உயிரைத் தியாகம் செய்தவர்களையும் நினைவுகூரும் வழியொன்றாகவும் இருக்கிறது. இந்த உரிமையானது சர்வதேச மனித உரிமைகள் கோட்பாடுகளால் பாதுகாக்கப்படுகிறது.
நினைவேந்தல் ஊர்தி மீதான அண்மையான தாக்குதலானது தமிழ்த் தேசம் எதிர்கொள்கின்ற பாரிய சவால்களை வெளிக்காட்டுவது மட்டுமல்லாமல் அமைதிவழிப் போராட்டத்தைக்கூட நினைவு கூரும் உரிமையையும், மற்றும் தமிழர்களின் பேச்சு உரிமையையும் ஒன்றுகூடும் உரிமையையும் நினைவு கூரலின் முக்கியத்துவத்தையும் சிங்கள அரசியல் சமூகம் ஏற்றுக் கொள்ள மறுப்பதை வெளிப்படுத்துகிறது.
கடந்த 2020ஆம் ஆண்டில், வெளிநாட்டுப் பிரஜைகள் தியாகி திலீபனின் நினைவேந்தல் நிகழ்வில் பங்கேற்கத் திட்டமிடுவதால் கொவிட் – 19 பரவும் ஆபத்துள்ளதெனக் கூறி நினைவுகூரலை சிறீலங்கா நீதித்துறை தடை செய்திருந்தது. அமைதியான ஒன்றுகூடல் மற்றும் வெளிப்படுத்தல் மூலம் தியாகி திலீபனுக்கு அகவணக்கம் செலுத்தும் தமிழ்ச் சமூகத்தின் உரிமையை சிறீலங்கா அரச அதிகாரிகள் மதிக்கவேண்டும் என்பதை வலியுறுத்துமாறு மனுவொன்றை அமைதிவழி ஒன்றுகூடல் மற்றும் சுதந்திரத்துக்கான ஐக்கிய நாடுகளின் சிறப்பு விசாரணை அதிகாரி (Special Rapporteur on Freedom of Peaceful Assembly and Association), கருத்துத் தெரிவிக்கும் மற்றும் வெளிப்படுத்தும் சுதந்திரத்துக்கான ஐக்கிய நாடுகளின் சிறப்பு விசாரணை அதிகாரிக்கு (United Nations Special Rapporteur on Freedom of Opinion and Expression) நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அனுப்பியிருந்தது.
மனித உரிமைகளைப் பாதுகாப்பவர்கள், செயற்பாட்டாளர்கள், சிறீலங்காவில் நினைவுகூரல் முன்னெடுப்புகளில் பங்கெடுப்பவர்கள் எதிர்கொள்கின்ற சவால்கள் குறித்து மனித உரிமைகள் சபைக்கான தனது அண்மையை அறிக்கையில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் வொல்கர் துர்க் கோடிட்டுக் காட்டியிருந்தார். புலனாய்வுச் சேவைகள், இராணுவம், பொலிஸ் அல்லது முன்னாள் துணை இராணுவக் குழுக்களோடிருந்த அடையாளங்காணப்படாத தனிபர்களால் மேற்கொள்ளப்படும் கண்காணிப்பு, அச்சுறுத்தல், துன்புறுத்தல் குறித்த அறிக்கைகள் மிகவும் கவலையளிப்பதாகவும், கட்டாயம் கவனிக்கப்பட வேண்டும் எனவும் தனதறிக்கையில் அவர் மேலும் குறிப்பிட்டிருந்தார்.
இலங்கைத் தீவிலுள்ள தமிழ்த் தேசத்தின் அடிப்படை மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கு சர்வதேச சமூகமானது ஒன்றிணைந்து, அவர்களின் நினைவுகூரல் உரிமை, அமைதியான ஒன்றுகூடல் மற்றும் கருத்துரிமையையும் அதனை வெளிப்படுத்தும் உரிமையையும் உறுதிப்படுத்த வேண்டும்.
இச்சம்பவமானது தமிழர்களின் நினைவுகூரல் உரிமை மறுக்கப்படுவதை நினைவூட்டுவதோடு , சிறீலங்காவிலுள்ள தமிழ் மக்களுக்கு தனிநாடு ஒன்றின் தேவையை மீள வலியுறுத்துகிறது. சுதந்திரமும் இறைமையும் கொண்ட நாடொன்றில்தான் அவர்களுடைய அடிப்படை மனித உரிமைகள் பேணப்படுவதும் அவர்களுடைய பாதுகாப்பும், தன்மானமும் உறுதிப்படுத்தப்படும்.