தமிழ் பொது வேட்பாளரின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியானது| TAMIL GENERAL CANDIDATE | ELECTION | JAFFNA |
TGTE TV
தமிழ்ப் பொது வேட்பாளரது தேர்தல் அறிக்கையில் பொதிந்துள்ள தமிழ் தேசிய அரசியலுக்கான பன்னாட்டு வெளிகளும் எதிர்காலமும்.
தமிழ்ப் பொது வேட்பாளர் மூலோபாயத்தின் ஊடாக தமிழ் தேசிய இனத்தின் இனப்பிரச்சினைக்கான தீர்வுக்கான பன்னாட்டு வெளிகள் திறக்கப்படுகின்றதாகவே வெளிப்படுத்தப்படுகின்றது. ஈழத் தமிழர்களுக்கு நடந்த, நடந்து கொண்டிருக்கின்ற கட்டமைக்கப்பட்ட தமிழின அழிப்பை சர்வதேச அரசியல் அதிகார அரங்குகளின் சாட்சியங்களோடு உறுதிப்படுத்தியிருக்கின்ற அதே வேளை பன்னாட்டு நீதியையும் கோரியதாக அமைகின்றது.
தற்போதைய இலங்கையின் அரசியலமைப்பை முழுமையாக தமிழ் தேசிய மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை வெளிப்படுத்தியிருக்கும் அதே வேளை பல்லினத்தன்மையான புதிய அரசியலமைப்பையும் பரிந்துரைப்பதாக தமிழ்ப் பொது வேட்பாளரது தேர்தல் அறிக்கை அமைந்திருக்கின்றது. கட்டமைக்கப்பட்ட இனவழிப்பிற்கு உள்ளாகிக்கொண்டிருக்கும் ஈழத்தழினத்திற்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் வரைக்கும் இடைக்கால பன்னாட்டு விசேட பாதுகாப்பு பொறிமுறை ஒன்றையும் தமிழ்ப் பொது வேட்பாளரது தேர்தல் அறிக்கை கோரிநிற்கின்றது.
இஸ்லாமிய தமிழர்களதும், மலையக தமிழர்களதும் நியாயமான அரசியல் அபிலாசைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதோடு நிரந்தர தீர்வு வழங்கப்பட வேண்டும் என்பதையும் தமிழ்ப் பொது வேட்பாளரது தேர்தல் அறிக்கை வெளிப்படுத்தியிருக்கின்றது.
எனவே தமிழ்ப் பொது வேட்பாளரது தேர்தல் அறிக்கை மூலம் எதிர்காலத்தில் பன்னாட்டு நீதி அரங்குகளையும் , நடைமுறைகளையும் ஈழத் தமிழினம் கையாளுவதற்கான வெளிகள் திறக்கப்படுவதோடு குறைந்த பட்ச பன்னாட்டு பாதுகாப்பையும் ஈழத் தமிழினம் பெற்றுக் கொள்வதற்கான வெளிகளும் திறக்கப்படுகின்றது. எனவே இதன் மூலம் எதிர்காலத்தில் பல முன்நகர்தல்களை செய்ய முடியும்.
அவை
👉🏼 சர்வதேச குற்றவியல் நீதி மன்றத்தை இனவழிப்பிற்கு உள்ளான , உள்ளாகிக் கொண்டு இருக்கின்ற மூத்த மொழிவழி தேசிய இனம் என்ற அடிப்படையில் நேரடியாக அணுக முடியும். - இதற்கு பாரிய மக்கள் அமைப்பு ஒன்று தேவை.
👉🏼ஏற்கனவே ஐக்கிய நாடுகள் மனிதவுரிமை சபையில் இருக்கின்ற ஈழத்தமிழினத்தின் பிரச்சினையை பொதுச்சபைக்கு மாற்றம் செய்ய முடியும்.
👉🏼ஈழத் தமிழர்கள் தனியானதொரு புதிய பல்லினத்துவம் உடைய அரசியலமைப்பு ஒன்றுக்கான மக்களின் ஆணை கோரக்கூடிய வாக்கெடுப்பு ஒன்றினையும் எதிர்காலத்தில் பன்னாட்டு சமூகத்தின் நடுவனத்துடன் நடத்த முடியும்.
👉🏼இடைக்கால பன்னாட்டு பாதுகாப்பு விசேட நடைமுறையின் மூலம் பொருளாதார , அரியல், சமூக பாதுகாப்பு உறுதிப்படுத்த முடியும்.
👉🏼தனக்கென ஈழத் தமிழர்களிள் புதியதொரு வெளியுறவுக் கொள்கையை உருவாக்கி நடைமுறைப்படுத்த முடியும். இதன் மூலம் ஈழத் தமிழர்களுக்கான ஆதரவு நாடுகளின் ஒத்துழைப்பையும் , கூட்டுக்களையும் உருவாக்க முடியும்.
எனவே தமிழ்ப் பொது வேட்பாளரது தேர்தல் அறிக்கை ஒரு மூலோபாயம் செறிந்த தேர்தல் அறிக்கையாக காணப்படுவதோடு இந்த தேர்தல் அறிக்கையை வெற்றிபெறச் செய்ய வேண்டியது ஒவ்வொரு ஈழத்தமிழனின் தார்மீகக் கடமை என்பதை அனைவரும் உணர வேண்டும்.
சங்கிற்கு அளிக்கும் வாக்குகள் தனி மனிதனுக்கான வாக்குகள் இல்லை மாறாக தேர்தல் அறிக்கை தாங்கி நிற்கும் மூலோபாயத்திற்கு அளிக்கும் வாக்குகள் ஆகும் என்ற புரிதலுடன் அனைவரும் செயற்பட வேண்டும்.
எமது மக்கள் இதுவரை காலமும் தாங்கிய இன்னல்களுக்கும் , சொல்ல முடியாத வேதனைகளுங்கும் காலம் தந்த மிகச்சிறந்த சந்தர்பமாகவும் , களமாகவும் இதனை உணர்ந்து அனைத்து தமிழர்களும் சங்குச் சின்னத்தை வெற்றிபெறச் செய்வதற்கு அணிவகுத்து பணியாற்ற வேண்டும்.