TGTE PM V Rudrakumaran I Geneva HRC I Sri Lanka Resolution I 2021
ஐ.நா தீர்மானம் சிறிலங்காவுக்கு தோல்வி, ஆனால் தமிழர்களுக்கான நீதியல்ல ! - நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
அனைத்துலக அரங்கில் சிறிலங்காவுக்கு ஏற்பட்ட தோல்வியாக, ஐ.நா மனித உரிமைச்சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் அமைந்துள்ளதென தெரிவித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், இந்த தோல்வி தமிழர்களுக்கு நீதியாக மாறவில்லை என்பதோடு பொறுப்புக்கூறலை சிறிலங்கா அரசிடமே கொடுக்கின்ற ஓர் வலுவற்ற தீர்மானம் என தெரிவித்துள்ளது.
ஐ.நா மனித உரிமைச்சபையில் பிரித்தானியா தலைமையிலான கூட்டுநாடுகளால் முன்வைக்கப்பட்ட சிறிலங்கா தொடர்பிலான தீர்மானத்துக்கு A/HRC/46/L.1 ஆதரவாக 22 நாடுகளும், எதிராக 11 நாடுகளும் வாக்களித்திருந்தன. வாக்கெடுப்பில் 14 பங்கேற்கவில்லை.
அண்மைக்காலத்தில் அனைத்துலக அரங்கொன்றில் சிறிலங்காவுக்கு ஏற்பட்ட தோல்வியாக இது இருந்தாலும், முன்னைய தீர்மானங்களை விட, வலுவற்ற நீர்த்துப்போன ஓர் தீர்மானமாக இது உள்ளதெனவும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.
கடந்த காலத்தில் சிறிலங்கா சாமார்த்தியமாக 'பயங்கரவாதத்தின் மீதான போர்' என்று பூச்சாண்டி காட்டி உத்திகளைக் கையாண்டது. 2015ல் ஏமாற்று அரசியலைக் கையாண்டு ஐ.நா மனித உரிமை;சபையின் 30/1 தீர்மானத்தைப் பிற நாடுகளுடன் கூட்டாக முன்மொழிந்து விட்டு, அதனைச் செயலாக்காமல் அனைத்துலக சமூகத்தினை சமாளித்ததென நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.
ஏற்கெனவே தங்களிடம் சான்று இருப்பதாக ஐ.நா மனிதவுரிமைச் சபையின் துணை ஆணையாளர் மெர் கான் வில்லியம்ஸ் கூறியுள்ள போதிலும், புதிய தீர்மானத்தில் ஒரு கூறு 'ஐ.நா ஆணையாளர் அலுவலகம் தகவலும் சான்றும் திரட்டவும் ஒருங்கமைக்கவும் பகுத்தாராயவும் பாதுகாக்கவும் வேண்டும்' என்று கேட்டுக் கொள்வதாக' உள்ளது. இது பாதிக்கப்பட்ட தமிழர்களை ஆற்றுப்படுத்துவதற்காக சேர்க்கப்பட்ட வெற்றுக்கூடான உள்ளடக்கமாக இது தோன்றுகிறது எனவும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.