தமிழர்களை அடக்கி ஆளவே சிறிலங்காவின் இராணுவ செலவினம் I ஐ.நாவில் முழங்கிய குரல் I TGTE I
தமிழர்களை அடக்கி ஆளவே சிறிலங்காவின் இராணுவ செலவினம் ! ஐ.நாவில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் இடித்துரைப்பு
தமிழர் தேசத்தினை ஆக்கிரமித்துள்ள சிறிலங்கா அரசு, தனது மொத்த செலவீட்டில் 15 வீதத்தினை இராணுவத்துக்கு செலவிடுவதானது, தமிழர்களை அடக்கி ஆளவே என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஐ.நா மனித உரிமைச்சபையில் இடித்தரைத்துள்ளது.
ஐ.நா மனித உரிமைச்சபை ஆணையாளரது சிறிலங்கா தொடர்பிலான அறிக்கையில், சிறிலங்கா தனது 1.86 மில்லியன் டொலர் செலவீட்டில் 15 வீதத்தினை இராணுவ செலவினங்களுக்கு ஒதுக்குவதனை சுட்டிக்காட்டி, இராணுவச் செலவினம் குறைப்பீடு செய்யப்பட வேண்டியது மட்டுமன்றி, தமிழர் பகுதிகளில் இருந்து இராணுவம் குறைக்கப்பட வேண்டும் என தெரிவித்திருந்தார்.
சிறிலங்காவின் பொருளாதார நெருக்கடிக்கான முக்கிய காரணிகளில் ஒன்றாக அதன் இராணுவச் செலவினங்களே அமைகின்றன என்பதனை பல மாதங்களாகவே சுட்டிக்காட்டி வந்திருந்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியுள்ள தமிழர் பகுதிகளில் இருந்து இராணுவம் நீக்கம் செய்யப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டினை தொடர்சியாக வலியுறுத்தி வந்திருந்த நிலையில் ஆணையாளரின் அறிக்கையும் இந்நிலைப்பாட்டுக்கு வலுவூட்டியிருந்தது.
இந்நிலையில் ஆணையாளரின் அறிக்கையினை கோடிட்டுக்காட்டி நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மனித உரிமைகளுக்கான அமைச்சர் லிங்கஜோதி, சிறிலங்காவின் இராணுவத்துக்கு செலவினடானது தமிழர்களை அடக்கி ஆளவேண்டும் என்பதற்கானதோடு, தமிழர்களுக்கு எதிராக தொடரும் மனித உரிமைமீறல்களுக்குஅது வழிசெய்கின்றது என தெரிவித்துள்ளார்.
மேலும் சிறிலங்கா அரசானது சிங்கள பௌத்த பெரும்பான்மை சித்தாந்தத்தை ஊக்குவித்து வருவதோடு, அது இனநாயக அடிப்படைவாத அரசாக மாறியுள்ளது எனவும் தனதுரையில் அமைச்சர் லிங்கஜோதி தெரிவித்துள்ளார்.
முள்ளிவாய்க்கால் யுத்தம் முடிவடைந்து 13 வருடங்கள் கடந்த நிலையிலும் பாதிக்கப்பட்டவர்கள் எவ்வளவு காலம் நீதிக்காக காத்திருக்க வேண்டும் என ஐ.நா உறுப்பு நாடுகளை நோக்கி கேள்வி எழுப்பிய அமைச்சர் லிங்கஜோதி, தீர்மானங்கள் மற்றும் கால நீடிப்புகளுக்கு பின்னரும், இனியும் சிறிலங்காவுக்கு மேலதிக காலநீடிப்பு வழங்கப்படக் கூடாது என தெரிவித்திருந்ததோடு போரில் பாதிக்கப்பட்டவர்கள் நீதிக்காக பொறுமையுடன் 13 வருடங்கள் கடந்துள்ள நிலையில், சிறிலங்காவின் நிலைமைகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு பாரப்படுத்த பரிந்துரைக்க வேண்டும் என தனதுரையில் கேட்டுக்கொண்டார்.